Miracles of oil bath and its benefits
பெற்றோரைப் பிரிந்து, வேலை, படிப்பு என எதன் பொருட்டோ வெளியூர் செல்கிறான் மகன். அந்த நேரத்தில் தாய் மறக்காமல் சொல்லும் வாசகம் ஒன்று உண்டு… `வேளைக்கு சாப்பிடுப்பா..! வாரா வாரம் முடியலைன்னாலும், மாசத்துக்கு ரெண்டு சனிக்கிழமையாச்சும் எண்ணெய் தேய்ச்சுக் குளி!’ சரியான நேரத்துக்குச் சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ, எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் நம் ஆரோக்கியத்துக்கு அத்தனை அவசியம். இதை உணர்ந்திருந்ததால்தான் நம் முன்னோர் எண்ணெய்க் குளியல் என்கிற ஒன்றில் அத்தனை கவனம் செலுத்தினார்கள்.
ஒரு மனிதன் தன் வாழ்வில் எந்த உச்சத்தையும் தொடட்டும்; ஆனால் அவனுடைய பாரம்பர்யம் என்கிற ஒன்று அவனை அத்தனை எளிதில் விட்டு விலகிவிடாது. உணவு, உடை, விளையாட்டு, நடனம் எதுவாகவும் இருக்கட்டும்… அது பாரம்பர்யமானது என்றால், அதற்கென தனி மகத்துவம் உண்டு. நம் முன்னோர் காரண, காரியம் இன்றி வெறுமனே எதையும் சொல்லிவிடவில்லை. அவர்கள் சொன்ன ஒவ்வொரு செய்திக்குப் பின்னாலும் அறிவியல்ரீதியான காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
அப்படி நம் பாரம்பர்யத்தில் கடைப்பிடிக்கப்படும் ஒரு விஷயம்தான் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது. நம் உடலுக்கு எண்ணெய் தேய்ப்பது பல வகை உடல் உபாதைகளுக்குத் தீர்வாகவும் அமையும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. வாரத்துக்கு ஒரு நாளாவது எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைக் கட்டாயமாகக் கடைபிடித்து வருவது பலருடைய வழக்கமாக இருப்பது இந்தக் காரணத்துக்காகத்தான். இதன் நன்மைகள் பற்றி சித்த மருத்துவர் பிரியங்கா பிரகாஷ் விரிவாக எடுத்துச் சொல்கிறார்…
எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நாம் பழங்காலத்தில் இருந்தே கடைப்பிடித்து வரக்கூடிய ஒரு பழக்கம். `பதார்த்த குண சிந்தாமணி’ என்ற மருத்துவ நூலில், `நோயணுகா விதி’ என்று ஒரு பாடல் இருக்கிறது. அதில், நம்மை நோய் தாக்காமல் இருக்கச் செய்யவேண்டிய காரியங்கள் குறித்துப் பல விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன. அவற்றில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் ஒரு பகுதி. அந்த அளவுக்கு தமிழர்கள், மருத்துவத்தில் எண்ணெய் தேய்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் கிடைக்கும் பலன்கள்…
* உச்சந்தலையில் எண்ணெய் வைப்பது உடலில் உள்ள சூட்டைத் தணித்து, குளிர்ச்சியடையச் செய்யும். எவ்வளவு உஷ்ணமான உடல்வாகு கொண்டவராக இருந்தாலும், உச்சந்தலையில் எண்ணெய் வைத்துக் குளிப்பது நிச்சயம் நல்ல பலனைத் தரும்.
* எண்ணெயைத் தடவி, மசாஜ் செய்வதால் உடலில் உள்ள ஈரப்பதம் காக்கப்படும். உடல் பொலிவை அதிகரிக்கும். சருமம் மிருதுவாக இருப்பதற்கும் மிளிர்வதற்கும் உடலில் எண்ணெய் தேய்ப்பது உதவும்.
* நம்முடைய பாதமும் கண்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. பாதத்தில் எண்ணெய் தேய்ப்பதால், பார்வைத்திறன் அதிகரிக்கும். கண்ணில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும்.
* தொப்புள் நம் உடலின் முக்கியமான ஒரு புள்ளி. யூக்கலிப்டஸ் எண்ணெய், சாண்டல்வுட் எண்ணெய், நெய் ஆகியவற்றைப் பயன்படுத்தி தொப்புளை மசாஜ் செய்தால் நல்ல உணர்வு கிடைக்கும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது தொப்புளில் எண்ணெய்விடுவதாலும் இந்தப் பலன் கிடைக்கும். தொப்புளில் தேங்காய் எண்ணெயைவிட்டு 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால் புத்துணர்ச்சி கிடைக்கும். அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உணர்வோம்.
* குழந்தைப் பிறப்புக்குப் பின்னர் வரக்கூடிய தழும்புகளை மறையச் செய்ய ஆமணக்கு எண்ணெய் உபயோகமாக இருக்கும். பெண்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
* நம் உடலில் அதிகம் உழைப்பைத் தரும் உறுப்புகள் கைகளும் கால்களும்தான். எண்ணெய் தேய்க்கும்போது, கட்டைவிரலில் எண்ணெய் வைப்பது அதன் வலிகளையெல்லாம் போக்கும். மேலும், மனஅழுத்தம் குறைந்து மனம் அமைதி பெறும்.
விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய், வேப்ப எண்ணெய் ஆகியவற்றையும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தலாம்.
Source: Vikatan